பிஎஸ்என்எல், எம்.டி.என்.எல். ஆகிய நிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறையில் இயங்கிவரும் அரசு பொதுத் துறை நிறுவனங்களாகும். இதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 1.76 லட்சம் ஊழியர்களும் எம்.டி.என்.எல். நிறுவனத்தில் 22 ஆயிரம் ஊழியர்களும் பணிபுரிந்துவருகின்றனர். இந்நிலையல் இந்நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கான ஜூலை மாத ஊதியம் இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை.
பிஎஸ்என்எல், எம்.டி.என்.எல். நிறுவனங்களுக்கு முறையே ரூ.750 லிருந்து 850 கோடியும் ரூ.160 கோடியும் ஊதியத்திற்காகத் தேவைப்படுகிறது. அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் பொதுத் துறை நிறுவனங்களாகக் கருதப்படும் இவ்விரு நிறுவனங்களில் ஏற்கனவே பிப்ரவரி மாதத்திற்கான ஊதியம் மார்ச் இறுதியில்தான் வழங்கப்பட்டது.
இது குறித்து எம்.டி.என்.எல். நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறை இயங்குநர் கூறுகையில், நிறுவனத்துக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையைச் சேகரிக்கும் பணியில் தற்போது ஈடுபட்டிருப்பதாகவும் ஊழியர்களுக்கு படிப்படியாக ஜூலை மாத ஊதியம் முழுமையாக வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.