மேற்கு வங்க மாநிலம், கஜ்னா கிராமவாசிகளிடமிருந்து கிடைத்த தகவல்களின் பேரில், எல்லை பாதுகாப்புப் படையினரின் எட்டாவது பட்டாலியனின் பணியாளர்கள், நாடியா மாவட்டத்தின் மகேந்திர பகுதியில் உள்ள எல்லைப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பெண்கள், மூன்று வயது குழந்தை உள்ளிட்ட வங்க தேசத்தைச் சேர்ந்த ஏழு பேர், காலை 11.30 மணியளவில் கஜ்னா-தாரக்பூர் சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்தனர். தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அவர்கள் தெரிவித்த நிலையில், வங்க தேசத்திலிருந்து இந்தியா செல்ல அவர்கள் முற்பட்டதும், வாகனத்திற்காக அங்கு காத்திருந்ததும் தெரிய வந்தது.
இரண்டு பெண்கள் ஹைதராபாத் செல்வதாகவும், மீதமுள்ளவர்கள் வேலைக்காக சென்னை செல்வதாகவும் அவர்கள் தெரிவித்த நிலையில், ஹைதராபாத்திற்கு செல்லும் பெண்கள், ஏற்கனவே செகந்திராபாத்தில் ஒரு வீட்டில் குழந்தை பராமரிப்பாளர்களாக பணிபுரிந்தனர் என்பதும், சென்னைக்குச் செல்லும் நபர்கள் அங்கு வேலைக்கான ஏற்பாடு செய்திருந்த இலியாஸ் என்ற நபரை சந்திக்கவிருந்ததும் தெரிய வந்தது.
இவர்களை சட்டவிரோதமாக இந்தியாவுக்கு அனுப்ப காளிக், கிதாப் அலி ஷிக்தார் என்னும் நபர்கள் உதவியதும், இவர்கள் கடத்தல் தொழிலில் ஈடுபடுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், தங்குமிடம், செலவுகளுக்கான பணத்தை செகந்திராபாத்தில் வசிக்கும் பரங்கல், சென்னையைச் சேர்ந்த இலியாஸ் ஆகியோர் ஏற்பாடு செய்ததும் தெரிய வந்தது.
இவர்களது வங்கிப் பரிவர்த்தனை விவரங்களுக்கு வங்கி அலுவலர்களை அணுக உள்ளதாகவும் எல்லை பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, ஏழு பேரும் மேற்கு வங்க காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.