ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ரம்பானில் உள்ள கெலா மோரில் 110 அடி பெய்லி பாலம் கட்டும் பணி 60 மணி நேரத்தில் நிறைவடைந்துள்ளதாக எல்லை சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) தெரிவித்துள்ளது. ஜனவரி 11ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவின் போது இந்த பாலம் சேதமடைந்தது. இதையடுத்து, அவ்வழியே வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
பின்னர், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ), என்.எச் -44 (ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை) நிறுவனம், சிவில் நிர்வாகம் சார்பில் பாலத்தை சீரமைக்க உதவுமாறு பி.ஆர்.ஓவிடம் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று விரைவாக பாலம் சீரமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிஆர்ஓ அலுவலர் ஒருவர் கூறுகையில், "ஜனவரி 14ஆம் தேதி காலை 7.30 மணிக்கு பாலத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆறு அலுவலர்கள், 10 மேற்பார்வையாளர்கள், 50 தொழிலாளர்கள் அடங்கிய 99 ஆர்.சி.சி (சாலை கட்டுமான நிறுவனம்) குழு, கமாண்டிங் லெப்டினன்ட் கேணல் வருண் கரே தலைமையில், 60 மணி நேரம் அயராது உழைத்து வெற்றிகரமாக பாலத்தை கட்டி முடித்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.
தற்போது, பெய்லி பாலம் வழக்கமான பொது போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.