உலகின் முன்னணி விமான நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸின் நான்காயிரம் விமானிகள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், 100 விழுக்காடு சேவையை அந்த நிறுவனம் ரத்து செய்துள்ளது.
இது குறித்து பிரிட்டிஷ் ஏர் லைன் விமானிகள் சங்கம் வெளியிட்ட செய்தியில், "பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் பெறும் லாபங்களை, தன் விமானிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ், "பிரிட்டிஷ் ஏர் லைன் விமானிகள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தத்தால் பயணிகள் அனுபவிக்கும் சிரமங்களை புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களின் ஊதிய சிக்கலைத் தீர்க்க பல காலமாக முயற்சித்து வருகிறோம்.
எத்தனை விமானிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்ற செய்தி எங்களுக்கு கிடைக்கவில்லை. எனவே, 100 விழுக்காடு சேவையை ரத்து செய்கிறோம்" எனச் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், பிரிட்டிஷ் ஏர் லைன் விமானிகள் சங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகிறது. முன்னதாக, செப்டம்பர் 10, 27 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தம் நடைபெறும் என பிரிட்டிஷ் ஏர் லைன் விமானிகள் சங்கம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.