கரோனா வைரஸ் தொற்று பரவமால் இருக்க நாடு முழுவதும் மூன்றாவது கட்டமாக ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த ஊரடங்கால் பிற மாநிலங்களுக்கு வேலைக்காக குடிபெயர்ந்த தொழிலாளர்கள் உணவு, வருமானம் இன்றி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாகனப் போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளதால், சில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு நடைபயணமாக செல்லும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நீண்ட தூரம் நடந்தே செல்லும் இவர்கள், அவ்வப்போது கிடைக்கும் இடங்களில் உறங்குவது வழக்கம்.
அவ்வாறு தண்டவாளத்தில் உறங்கி 16 தொழிலாளர்கள், தங்களது உயிரைப் பறிகொடுத்துள்ள சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிராவுக்கு வேலை செய்துவந்த தொழிலாளர்கள் சிலர், தங்களது சொந்த ஊரான மத்தியப் பிரதேச மாநிலம் புவாசல் பகுதிக்கு, ஜல்னாவிலிருந்து நடந்து சென்றுள்ளனர்.
அனைவரும் கர்மாட் என்ற இடத்திற்கு வந்தபோது, களைப்பாக இருந்ததால் ரயில் வராது என்ற நினைப்பில் அங்கிருந்த தண்டவாளத்தில் படுத்து உறங்கியுள்ளனர். ஆனால் அதிகாலை 5.15 மணியளவில் அந்த தண்டவாளத்தின் வழியாக வந்த சரக்கு ரயில், அவர்கள் மீது ஏறியுள்ளது. இதில் சம்பவ இடத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடம் விரைந்து வந்த காவல் துறையினர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊரடங்கின் காரணமாக சொந்த ஊருக்கு நடந்து சென்றவர்கள் மீது ரயில் ஏறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரயில் மோதி வெளிமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு: மோடி இரங்கல்