நாட்டின் 71ஆவது குடியரசு தினம் ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனால், நாட்டின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுவருகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள ராஜ்பாத்தில் நடைபெறும் குடியரசு தினவிழாவில், பல்வேறு மாநிலங்களின் கலை கலாசாரத்தை எடுத்துரைக்கும் வகையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். மத்திய - மாநில அரசுகள் சார்பில் இந்திய கலாசார சிறப்பை விளக்கும் அலங்கார ஊர்திகளும் இந்த அணிவகுப்பில் பங்கேற்கும்.
வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் இந்த விழாவில் இந்தியாவின் கலாசார சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மற்றும் சாகசங்கள் இடம் பெறும். குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்துகொள்ள சிறப்பு விருந்தினாராக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ அழைக்கப்பட்டார். அதை ஏற்றுக்கொண்டு நான்கு நாள் இந்திய பயணமாக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ இன்று டெல்லி வந்தடைந்தார். இதையடுத்து, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை நாளை சந்திக்கவுள்ளார்.
பிரேசில் அதிபருடன் அந்நாட்டு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அலுவலர்கள் ஆகியோர் உடன் வந்துள்ளனர். இந்திய பயணத்தின்போது, பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம், வேளாண்மை போன்ற முக்கிய துறைகள் குறித்து இரு தரப்பினரும் விவாதிக்கவுள்ளதாக இந்தியாவுக்கான பிரேசில் நாட்டு தூதர் தெரிவித்துள்ளார்.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாட்டின் ஒரு அங்கமாக, நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடும் டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ‘அதிகாரத்தில் இருப்பவர்கள் ஜனநாயகத்தைத் துண்டாடுகிறார்கள்’ - சிதம்பரம்