லடாக் எல்லைப் பகுதியில் இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மோதல் நிலவி வருகிறது. இதன் காரணமாக, இருதரப்பு ராணுவத்தினரும் அங்கு குவித்துள்ளனர்.
இந்த மோதலுக்குச் சமூக தீர்வு காணும் நோக்கில் உயர்மட்ட அளவில் தொடர் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில், கடந்த திங்கள்கிழமை (ஜூன் 15) கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே திடீரென பயங்கர கைகலப்பு ஏற்பட்டது.
சுமார் ஏழு மணி நேரம் நீடித்த இந்த மோதலில், 20 இந்திய ராணுவத்தினர் வீரமரணமடைந்தனர். இது நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் இந்த அராஜக போக்கைக் கண்டிக்கும் பலர் , சீனப் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக விவாதம் நடைபெற்று வரும் சூழலில், சீனப் பொருள்களைப் புறக்கணிப்பதால் இந்தியப் பொருளாதாரத்துக்கே அதிக பாதிப்பு என 'குளோபல் டைம்ஸ்' சீன அரசு நாளிதழில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
'India must not let border scuffle fray economic relations with China' எனத் தலைப்பிடப்பட்ட அந்தக் கட்டுரையில், "அசுர பலம் படைத்த இந்த இரு ஆசிய நாடுகளின் எல்லையில் அமைதி நிலவினால்தான், பொருளாதார உறவை வலுவாக்க முடியும். பொருளாதார உறவு நெருக்கமானால் தான் இருநாட்டு மக்களும் பயனடைவார்கள்.
தற்போது எழுந்த இந்த புதிய எல்லைப் பிரச்னை மேலும் மோசமாவதைத் தடுத்து, இருதரப்பு உறவை மீட்க இருநாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் கல்வானில் நடந்த மோதலை வைத்து சீனாவுக்கு எதிராக இந்திய மக்கள் மனதில் வெறுப்புணர்வை துண்டிவிடக்கூடாது.
ஆனால், லடாக் எல்லைப் பிரச்னையை ஊதிப் பெரிதாக்கி, சீனாவின் மூக்கை உடைக்குமாறு இந்திய ஊடகங்கள் கருத்துக் கட்டுரைகளை எழுதி மக்களிடையே வெறுப்புணர்வை விதைத்து வருகின்றன.
இதற்கெல்லாம் இந்திய மக்கள் செவிசாய்க்கமாட்டார்கள் என நம்புகிறோம். பொருளாதார ரீதியாகவும், புவி அரசியல் ரீதியாகவும் இந்தியாவுக்குச் சீனா முக்கியமான நாடு.
சீனப் பொருள்களைப் புறக்கணிக்குமாறு இந்தியாவில் குரல் எழுந்துள்ளது. அப்படிச் செய்தால் இந்தியப் பொருளாதாரமே அதிக பாதிப்பைச் சந்திக்க நேரிடும். இந்தியாவில் செயல்பட்டு வரும் 30 முன்னணி ஸ்டாட் அப் நிறுவனங்களில் சீனா முதலீடு செய்துள்ளது.
மேலும், தொலைக்காட்சியிருந்து, மைக்ரோவேவ் ஓவன்கள், ஏசி, ஸ்மாட் போன்கள் வரை இந்தியர்கள் பயன்படுத்தும் பெரும்பாலான பொருள்கள் சீனாவில் செய்யப்பட்டதாகும்.
தரம், விலை அடிப்படையில் பார்க்கும் போது சீன பொருள்களுக்கு மாற்றே இல்லை.
சீனாவுடன் நட்பு பாராட்ட இந்தியாவுக்கு 100 காரணங்கள் உண்டு. நாட்டு மக்களின் நலன் கருதி எல்லை பிரச்னை சுமூகமாக தீர்க்கப்பட வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தோட்டத்தைச் சேதப்படுத்தியதாக மாடு மேய்த்த சிறுவன் அடித்துக்கொலை!