கர்நாடகா மாநிலம் பெல்காம் மாவட்டம் ஜாதவ் நகரைச் சேர்ந்த அன்ஷ்ராவ் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இவர் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கார் வடிவமைப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கரோனா பொதுமுடக்கம் அதற்கான நேரத்தை வாரி வழங்கவே, கூகுள், யூடியூப் என கார் வடிவமைப்பு சம்பந்தமான அனைத்து வீடியோக்களையும் கண்டு குறிப்பெடுத்தார்.
தன்னால் ஒரு காரை வடிவமைக்கமுடியும் என்ற நம்பிக்கை துளிர் விட்டதும், தனது தந்தை விநாயக்ராவ்விடம் கண்களில் கனவு விரிய அதனைத் தெரிவித்தார்.
தனது மகனின் திட்டத்தைப் பொறுமையாகக் கேட்டு முடித்த விநாயக்ராவ், வெறும் பத்தாயிரம் ரூபாய்யை மட்டுமே தன் மகனின் கைகளில் அளிக்கிறார். அன்ஷ்ராவுக்கு பயங்கர அதிர்ச்சி. ஒரு பெரிய காரை வடிவமைக்க தனது தந்தை பத்தாயிரம் தான் கொடுப்பார் என்பதை அந்த வளரும் வடிவமைப்பாளர் எதிர்ப்பார்க்கவில்லை.
அன்ஷ்ராவ் தன் கையிலிருக்கும் சிறிய தொகையுடன் பழைய கடைக்கு விரைந்தார். அங்கிருந்து சில மூலப் பொருள்களை வாங்கி வந்து ஒரு காரை வடிவமைத்துள்ளார். இதைக் கண்ட தந்தை விநாயக், அன்று தனது மகன் கார் வடிவமைப்பு குறித்து விளையாட்டாகச் சொல்லவில்லை என்பதை புரிந்து கொண்டார். மேற்கொண்டு தன் மகனை நம்பி பணம் கொடுக்கிறார்.
அதோடு நிற்காமல்,தனது நண்பரிடம் பேசி காருக்கு தேவையான வெல்டிங் வேலைகளைச் செய்ய பட்டறையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். பழைய டயர்கள், கதவு என அனைத்தையும் சேகரித்த அன்ஷ் அவற்றை வெல்டிங் செய்து காருடன் இணைத்தார்.
என்ன சிறப்பு?
இந்த காரில் பக்க கண்ணாடிக்கு (side mirror) பதிலாக கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் தனித்துவமே கியர் இல்லாமல் இயங்குவது தான். தானாக இயங்கும் வகையில் நான்கு 12 வாட் பேட்டரிகளுடன் வடிவமைக்கப்பட்ட இந்தக் காரில், மற்ற காரைப் போல இயங்திரங்கள் இல்லை. நான்கு மணி நேரம் சார்ஜ் செய்தால் 70 கி.மீ வரை இயங்கும்.
ஒரு காரை வடிவமைக்க ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள அன்ஷ்ராவ், இரண்டு வாரங்களில் ஒரு புதிய காரைத் தயார் செய்துவிடலாம் என்கிறார், மெல்லிய புன்னகையுடன்.