இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, "புதுச்சேரியில் மூன்று பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுடன் தொடர்புடையவர்களின் உமிழ்நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. மொத்தம் 49 பேரின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டதில் மூலக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குப் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் புதுச்சேரியில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. புதிதாகப் பாதிக்கப்பட்டவர் கரோனா தொற்று நோய்ப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளார்கள். புதுச்சேரி மாநிலத்தில் மூன்று நாள்களுக்கு ஒருமுறை கடைகள் மூடப்படும் என்றே தெரிவித்திருந்தேன். அரசின் சார்பில் இதுவரை உத்தரவு பிறப்பிக்கவில்லை. கடைகள் மூடப்படும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தொடர்ந்து தற்போது உள்ள நடைமுறையே தொடரும்.
நாளை மறுதினம் பிரதமர் அனைத்து முதலமைச்சர்களுடனும் காணொலி மூலம் பேச உள்ளார். புதுச்சேரி சார்பாக எனக்குப் பேச வாய்ப்பளிக்கக் கோரிக்கைவைத்துள்ளேன்.
மத்திய அரசானது பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட மதிப்பில் நான்கில் ஒரு பங்கு கொடுத்து இருக்கின்றார்கள். புதுச்சேரி மாநிலத்திற்கு கரோனா நிதி என்று மத்திய அரசு ஏதும் வழங்கவில்லை.
மத்திய அரசு துணிக் கடைகள், மின்னணுப்பொருள் கடைகள், புத்தகக் கடைகள், நகைக் கடைகள் திறக்க வலியுறுத்தி உள்ளார்கள். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளேன். அனைத்துக் கடைகளிலும் 50 விழுக்காடு ஊழியர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும். தகுந்த இடைவெளிவிட்டு, கிருமி நாசினி கொண்டு மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
ஆனால், மதுக்கடைகள் திறக்க அனுமதியில்லை. புதுச்சேரியில் உள்ள மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி வழங்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க : அகவிலைப்படி உயர்வு நிறுத்தம் - அரசு உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு