புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சராக இருப்பவர் கந்தசாமி. இவர் உப்பளம் தொகுதியில் உள்ள வீட்டில், தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று புதுச்சேரி காவல் நிலையத்திற்கு, தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பெயர் குறிப்பிடாமல் மறுபுறத்தில் பேசியவர், அமைச்சர் கந்தசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார். தகவல் அறிந்த போலீசார், உடனடியாக அமைச்சர் வீட்டுக்கு மோப்ப நாய், பாம் ஸ்குவாட் உடன் விரைந்துள்ளனர். அங்கு அமைச்சரின் வீட்டில் உள்ள கார், வாகனங்கள், வீடு உள்ளிட்ட அனைத்து அறைகளையும் மெட்டல் டிடெக்டர் வைத்து முழுமையாக பரிசோதனை செய்தனர்.
இந்த சோதனையின்போது எதுவும் இருந்ததாக அறிகுறி இல்லை என்று சோதனை செய்தவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே வெளியே சென்றிருந்த அமைச்சர் வீட்டுக்கு திரும்பியதும், காவல்துறையிடம் சோதனை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் பேட்டியளித்த அமைச்சர் கந்தசாமி, “எனக்கு விரோதி என்று யாருமில்லை. யாரோ ஒரு நபர் புதுச்சேரி சோலை நகர் பகுதியில் இருந்து தொலைபேசி வாயிலாக காவல்நிலையத்துக்கு தொடர்பு கொண்டு, வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டி உள்ளனர். அது புரளி என்பது சோதனையின் போது தெரியவந்துள்ளது. மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டு காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று தெரிவித்தார்.