புதுச்சேரி வீராம்பட்டினம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கலைவாணி. இவருக்கு சொந்தமான விசைப்படகினை அவரது கணவர் நடராஜன், முருகன், சிலம்பரசன் உள்ளிட்ட 4 மீனவர்கள் நேற்று (ஆக22) மாலை ஆழ்கடலில் மீன்பிடிக்க எடுத்துச் சென்றுள்ளனர். தேங்காய்த்திட்டு துறைமுகத்தின் வழியாக கடலுக்குச் செல்லும்போது அங்குள்ள கல்லில் படகு பட்டு லேசான சேதம் ஏற்பட்டது.
பெரிதாகச் சேதம் ஏற்படவில்லை என எண்ணிய மீனவர்கள் நால்வரும் கடலுக்குள் சென்றனர். கடலூர் எல்லையான தேவனாம்பட்டினம் அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது நள்ளிரவு படகுக்குள் கடல் நீர் உள்புகத் தொடங்கியது. இதனைக் கவனித்த மீனவர்கள் படகில் இருந்து தண்ணீரை வெளியேற்ற எவ்வளவோ முயற்சித்தும் பலனில்லாமல்போனது.
ஆதலால், உயிர் தப்ப படகைக் கரையோரமாக இயக்க முடிவு செய்தனர். இதையடுத்து, கடலூர்-புதுச்சேரி இடையில் உள்ள புதுக்குப்பம் கிராமத்தில் படகை நிறுத்த முயற்சித்தனர். இதனிடையே படகு மூழ்கத் தொடங்கியதால் 4 மீனவர்களும் படகில் இருந்து குதித்து நீந்தியே கரை சேர்ந்தனர். அந்த பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் உதவியோடு படகை கரைக்கு இழுத்துவந்தனர்.
சேதம்
இந்த விபத்தில் வலை, படகு, அதன் என்ஜின் என அனைத்து பொருள்களும் முழுமையாக சேதமடைந்துள்ளன. இதன் மதிப்பு 20 லட்சம் ரூபாய் என மீனவர்கள் தெரிவித்தனர். அரசு உரிய நிவாரணம் வழங்கினால் உதவியாக இருக்கும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்: கடலோர காவல் படை மீட்பு!