கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பானிஹாட்டி பகுதியின் 2ஆவது வார்டில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக பிரமுகர், அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இதையடுத்து, அவர் காவலர்களால் கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு கைதுசெய்யப்பட்ட பாஜக பிரமுகரை விடுவிக்கக்கோரி பாஜகவினர் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கர்தா காவல் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, பாஜகவினர் காவல் நிலையத்தை தாக்க முயன்றதாகவும், காவலர்களின் துப்பாக்கிகளைப் பறிக்க முயன்றதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.
இதற்கிடையில், காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது லத்தி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில் பாஜக பெண் பிரமுகர்கள் பலர் காயமடைந்ததாக பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க பாஜக கோரிக்கை