டெல்லி மாநிலம், மேற்கு வினோத் நகர்ப் பகுதியில் வசித்து வருபவர், ராகுல் சிங் ஆல்யாஸ். இவர் அப்பகுதியின் முன்னாள் மாநகராட்சி பாஜக கட்சி வேட்பாளரும் ஆவார்.
இந்நிலையில், இவர் வழக்கம்போல் காலை நடைப்பயிற்சிக்கு சென்ற சமயத்தில், மண்டவாலி பகுதியிலுள்ள ஒரு பூங்கா அருகே அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும் ராகுல் சிங் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குற்றவாளிகள் யார் என்பதை தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர். மேலும் இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், 'ராகுல் தினமும் இவ்வழியாக வருவதை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள், நேற்று காலை எட்டு மணியளவில் அவரை ஆறு முறை சுட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த ராகுல் சிங், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மேலும், கொலையாளிகள் யார் என்பதை, அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்து' வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் தலை நகரில், பாஜக பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.