ஜெய்ப்பூரில் நடைபெற்றுவரும் இலக்கிய விழாவில் கலந்துகொண்ட ராஜஸ்தான் துணை முதலமைச்சரும் காங்கிரஸ் முக்கிய தலைவருமான சச்சின் பைலட், "நாட்டை ஆள்பவர்களை யாரும் கட்டிப்போடவில்லை. அவர்கள் குறைந்தபட்சம் போராட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் பேச்சுவார்த்தையாவது நடத்தலாம்.
நாட்டின் மோசமான எதிரிகளிடம் நீங்கள் பேச்சுவார்த்தை நடத்துவீர்கள், ஆனால் நம் நாட்டு குடிமக்களிடமும் உங்களை ஆதரித்த வாக்காளர்களிடமும் நீங்கள் பேச்சுவார்த்தை நடத்த மாட்டீர்களா?” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இது ஒரு குறிப்பிட்ட மதத்தினருடைய பிரச்னையோ, சாதியனருடைய பிரச்னையோ இல்லை. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்று நீங்கள் கூறும்போது, உங்களுக்கு வாக்களித்தவர்கள் வாக்களிக்காதவர்கள் என்று அனைவருக்கும் நீங்கள்தான் பொறுப்பு.
மக்கள் பிரச்னையை புரிந்துகொள்ளும் ஒரு தலைவர் தேவை. இங்கு அனைத்தையும் விட முக்கியம் தேர்தலில் வாக்குகளை பெறுவதுதான். மக்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை. அதேபோல டெல்லியில் நடைபெறவுள்ள தேர்தலிலும் பாஜக வெற்றி பெறாது. ஏனென்றால் பொதுமக்களின் விருப்பம் அதுதான்.
காங்கிரஸ் நீண்ட காலமாக இங்கு ஆட்சியிலிருந்தது, ஏனெனில் மக்கள் ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்தனர். ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம், பாதுகாப்பு படைகள் உள்ளிட்டவை 65 ஆண்டுகளாக சுதந்திரமாக செயல்பட்டதற்கு, காங்கிரஸ் அதன் செயல்பாடுகளில் இடையூறு செய்யாமல் இருந்ததே காரணம்" என்றார்.
இதையும் படிங்க: முன்னாள் முதலமைச்சருக்கு ஏற்பட்ட கதி!