மகாராஷ்டிராவில் மகா விகாஷ் அகாதி கூட்டணி (சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ்) ஆட்சி நடந்துவருகிறது. முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பொறுப்பு வகித்துவருகிறார். இவரின் ஆட்சிக்காலத்தில், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு ஐந்து விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகின.
அதில், “இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் திட்ட வரைவை காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் முதலமைச்சரிடம் வழங்கிவிட்டனர். அதற்கு உத்தவ் தாக்கரே சம்மதித்துவிட்டார்” என்றும் கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையில் இவ்விவகாரம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என முதலமைச்சர் உத்தவ் தாக்கரே விளக்கமளித்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர் சுதீர் முங்கந்திவார், “உத்தவ் தாக்கரே ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளார் என நினைக்கிறேன். இந்த விவகாரத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அழுத்தம் கொடுத்தாலும் சிவசேனா கவலைப்படக் கூடாது.
அவர்கள் அரசை விட்டு வெளியேறினாலும் இந்த விஷயத்தில் நாங்கள் உங்களின் அரசை ஆதரிப்போம். ஏனெனில் நாம் இருவரும் சித்தாந்த ரீதியிலான கூட்டாளிகள்” என்றார்.
மேலும், மதத்தின் அடிப்படையில் ஏன் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கேள்வியெழுப்பிய அவர், ஏற்கனவே மத்திய அரசு இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு பத்து விழுக்காடு இடஒதுக்கீட்டை உருவாக்கியுள்ளதைச் சுட்டிக்காட்டினார். ஆகவே இவ்விவகாரத்தில் சிவசேனா தனது தெளிவான நிலைப்பாட்டை மக்களுக்கு விளக்க வேண்டும் கூறினார்.
இதையும் படிங்க: 'நாட்டின் யோசனைக்கு எதிரானது'- சி.ஏ.ஏ. குறித்து சசி தரூர்