தமிழ்நாடு பாஜக தலைவராகப் பதவி வகித்து வருபவர் தமிழிசை செளந்தரராஜன். இவரது தந்தை குமரி அனந்தன் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தாலும், தனது அரசியல் பயணத்தை பாஜகவில் இருந்தே தமிழிசை தொடங்கினார்.
அதன்பின், தொடர்ந்து கட்சிப் பணியாற்றி வந்த அவர், பாஜகவின் தேசிய செயலாளர், அக்கட்சியின் தமிழக தலைவர் என அரசியலில் அடுத்தடுத்த நிலைகளுக்குத் தன்னை உயர்த்திக்கொண்டார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை செளந்தரராஜன், 2.15 லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தார். இருப்பினும் திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தோற்றுப்போனார். இந்நிலையில், தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை செளந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.