ஜல்பைகுரி (மேற்கு வங்கம்): அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் மூலம் மேற்கு வங்கத்தில் வகுப்புவாதத்தை ஏற்படுத்தவும், எங்களுக்குள் இந்து-இஸ்லாமிய வாக்குகளைப் பிரிக்கவும் பாஜக முயற்சி செய்கிறது என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் நல்ல வாக்குகளைப் பெற்ற அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமீன் கட்சி, அடுத்த ஆண்டு மேற்குவங்கத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
அண்மையில் நடந்துமுடிந்த பிகார் தேர்தல் முடிவில், ஏஐஎம்ஐஎம் கட்சி, மேற்கு வங்கத்தின் எல்லையில் அமைந்துள்ள இஸ்லாமியர்கள் அதிகமுள்ள சீமஞ்சல் பகுதியில் ஐந்து இடங்களில் வெற்றிபெற்றது.
மேற்கு வங்க முதலமைச்சர் ஒரு பேரணியின்போது, “இஸ்லாமிய வாக்குகளைப் பிரிப்பதற்காக பாஜக ஹைதராபாத்தில் இருக்கு ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு பல கோடி ரூபாய் செலவிடுகிறது.
இந்து வாக்குகளை பாஜகவும், இஸ்லாமிய வாக்குகளை ஹைதராபாத் கட்சியும் பெறுவதே அவர்களின் திட்டம். இந்தத் திட்டம் அவர்கள் நினைத்ததுபோலவே பிகார் தேர்தலில் நடந்தது. இந்தக் கட்சி பாஜகவின் பி-டீம்” என அவர் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் சுமார் 30 விழுக்காடு இஸ்லாமிய மக்கள் உள்ளனர். இவர்கள் கிட்டத்தட்ட 100-110 இடங்களில் யார் வெற்றிபெற வேண்டும் என்று தீர்மானிக்கக்கூடியவர்கள் ஆவர்.
ஏஐஎம்ஐஎம் கட்சியின் நுழைவால், சமன்பாடுகள் மாறக்கூடும் என திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஒரு பகுதியினர் அச்சத்தில் உள்ளனர். வரும் 2021ஆம் ஆண்டில் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும்: ட்விட்டரில் மோதிக்கொள்ளும் சர்வதேச மல்யுத்த வீரர்கள்!