பிகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ் குமார் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. அம்மாநில துணை முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த சுஷில்குமார் மோடி செயல்பட்டுவருகிறார். இந்தாண்டு பிற்பகுதியில் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பீகார் கூட்டணியில் விரிசல் ஏற்படும் விதமாக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் சஞ்சய் சிங் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கட்சி தனது முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்து தேர்தலைச் சந்திக்க வேண்டும் என நிதிஷ் குமாருக்கு குடைச்சல் கொடுக்கும் கருத்தை தெரிவித்துள்ளார் சஞ்சய் சிங்.
நாட்டின் மற்ற பகுதிகளைப் போல பிகாரிலும் பாஜக வலிமையாக உள்ளதாகத் தெரிவித்த சஞ்சய் சிங், பாஜக தனது முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்து தேர்தலை சந்திப்பதில் என்ன தவறு எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யலாம் எனக் கூறியுள்ள சஞ்சய் சிங், சுஷில் மோடி உள்ளிட்ட சில பாஜக தலைவர்கள் முதலமைச்சர் பதவிக்குத் தகுதியானவர் என்றும் கூறியுள்ளார். பீகாரின் முதலமைச்சராக ஐந்து முறை நிதிஷ் குமார் பதவி வகித்துவரும் நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளது தேர்தலுக்கு முன் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்துமோ என்ற ஐயத்தை உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: 'அவதார் 2' முதல் பார்வையை வெளியிட்ட கேமரூன்