மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. இன்று மாலை முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தற்போதே வெற்றிக்கொண்டாட்டங்களுக்கு பாஜகவினர் தயராகி வருகின்றனர். காரணம் காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக மிகப்பெரிய வித்தியாசத்திலேயே முன்னிலை வகித்துவருகிறது.
இந்தியாவின் மையப்பகுதியாக கருதப்படும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் என அனைத்து மாநிலங்களிலும் பாஜக முன்னிலை வகித்துவருகிறது.
இதில் பாஜக ஆட்சி செய்துவரும் உத்தரப் பிரதேசத்தில் 54 தொகுதியில் முன்னிலை வகித்துவருகிறது. அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்களான பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அமைத்த கூட்டணி 25 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்தில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.
இது தவிர கடந்தாண்டு ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றிபெற்று பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் மாநில ஆட்சியை பறித்தது. அதைத் தொடர்ந்து மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டு வந்ததாகவும், இந்த முடிவுகள் மக்களவைத் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறிவந்தனர்.
இந்நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வரும் சூழலில், மத்தியப் பிரதேசம் 24, ராஜஸ்தான் 24, சத்தீஸ்கார் 9 என அனைத்திலும் முன்னிலை பெற்று காங்கிரசின் கூற்றை பொய்க்கி உள்ளது. இதே போன்று பிகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் பாஜக முன்னிலைப் பெற்று தனது வெற்றியை உறுதி செய்துள்ளது.