இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவியேற்று ஓராண்டை நிறைவு செய்திருக்கும் நரேந்திர மோடியைப் பாராட்டும் விதமாக, பாஜக நடத்தவுள்ள பேரணி குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துப் பேசிய ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவரும் லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ், "இந்தியாவின் பணக்காரக் கட்சியாக பாஜக திகழ்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் பணக்காரக் கட்சியாகவும் அது திகழ்கிறது. பாஜகவிலுள்ளவர்கள் தங்களது குடும்ப நலன், தங்களது பணக்கார நண்பர்களின் நலன்களை மட்டுமே கவனத்தில் கொள்கின்றனர்.
ஏழை, எளிய மக்களின் நலன்களை பாஜக கருத்தில் கொள்வதில்லை. சாதாரண மக்களை தேர்தல் நேரத்தில் வாக்கு பெறுவதற்காக மட்டுமே பாஜகவினர் சந்தித்தனர்" என்றார்.
மேலும், "ஊரடங்கு அமல்படுத்தும் முன்பே மோடி அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு போதுமான நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். பிகாரிலுள்ள தனிமைப்படுத்தும் மையங்களில் போதுமான வசதிகளை நிதிஷ் குமார் ஏற்படுத்திக்கொடுக்கவில்லை.
சரியான முறையில் திட்டமிட்டு மக்களுக்கு சேவையாற்றத் தவறினால், எதிர்க்கட்சிகளின் உதவியை நிதிஷ் குமார் நாடலாம். இந்த பெருந்தொற்று காலத்தில் மக்களுக்கு உதவுவதே எதிர்க்கட்சிகளின் தார்மீக கடமை" என்றார்.
இதையும் படிங்க: மத்திய அரசின் லாக்டவுன் யுக்தி தோல்வி - ராகுல் காந்தி