மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்பம் முதல் பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது. டெல்லி, குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட பெருவாரியான மாநிலங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. அதிலும் தன்னுடன் போட்டியிட்ட காங்கிரஸை விட தனிப்பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க திட்டமிட்டு வருகிறது. மதியம் 2 மணி வரையிலான தேர்தல் முடிவில் பாஜக 341 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 89 இடங்களிலும், இதர கட்சிகள் 112 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. இதர மாநில கட்சிகள் பிடித்த இடங்களை கூட தேசிய கட்சியான காங்கிரஸ் வாங்காதது, அக்கட்சிக்கு பெரிய பின்னடவை கொடுத்துள்ளது.
பணம் மதிப்பிழப்பு, விவசாயிகள் பிரச்னை, ரபேல் ஊழல் உள்ளிட்ட பிரச்னைகளால் மக்களிடத்தில் பாஜக தோல்வி பெறும் என்று எதிர்க்கட்சிகள் தம்பட்டம் அடித்தன. ஆனால் அத்தனையும் தவிடு பொடியாக்கும் வகையில் தேர்தல் முடிவு வந்துள்ளது. மொத்தம் 542 இடங்களில் 341 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. பாஜகவின் அறுதிப் பெரும்பான்மை பெற்று, மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க இருக்கிறது. ஏனெனில் தொடர்ந்து இரண்டாவது முறை பாஜக ஆட்சி அமைப்பது இதுவே முதல் முறையும் கூட. இதனால் பாஜக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். பாஜகவின் கட்சி அலுவலகங்கள் முன்பாக ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் திரண்டு பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஆட்டம் பாட்டமுமாக தங்களுடையை வெற்றியை கொண்டாடி வருகின்றனர். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகம் உட்பட அனைத்து மாநிலங்களில் உள்ள தலைமை அலுவலகங்கள் முன்பாக வெற்றிக் கொண்டாட்டத்தில் உள்ளனர். முக்கியமாக மும்பையில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் முன்பாக பிரம்மாண்ட கேக்கை வெட்டினர். இதுபோல இந்தியா முழுவதும் பாஜகவின் தேர்தல் வெற்றி கொண்டாடப்பட்டு வருகிறது.