ராஜஸ்தான் மாநிலத்தில் 21 மாவட்டங்களில் 4 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. அங்குள்ள 4 ஆயிரத்து 371 ஒன்றிய கவுன்சில் (பஞ்சாயத்து சமிதி), 636 மாவட்ட கவுன்சில் (ஜில்லா சமிதி) ஆகியவற்றில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மாநிலத்தை ஆளும் கட்சியான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி 5 மாவட்ட ஊராட்சிகளில் மட்டுமே வெற்றியை உறுதிசெய்துள்ளது. ஆனால், எதிர்க்கட்சியான பாஜக 11 இடங்களை தன்வசப்படுத்தியுள்ளது. பாஜக கூட்டணிக் கட்சியான ராஷ்டிரிய லோக் தந்திரிக் கட்சி குறிப்பிடத்தக்க இடங்களை வென்றுள்ளது. 4 ஆயிரத்து 371 பஞ்சாயத்து வார்டுகளில் 1, 989 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 1,852 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சைகள் 439 இடங்களில் வென்றுள்ளனர். ராஷ்டிரிய லோக் தந்திரி கட்சி 60 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. சிபிஎம் 26, பகுஜன் சமாஜ் கட்சி 5, தேசியவாத கட்சி 1 என இடங்களை வென்றுள்ளன.
அதேபோல, மாவட்ட கவுன்சிலின் 636 இடங்களில், பாஜக 353 இடங்களையும், காங்கிரஸ் 252 இடங்களையும் வென்றுள்ளன. சுயேட்சைகள் 18 இடங்களை வென்றுள்ளனர்.
நாடு முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாஜகவிற்கான இந்த வெற்றி பெரிதளவு கொண்டாடப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் வெற்றிபெறாது என காலங்காலமான இருந்துவரும் நம்பிக்கையை உடைக்கும் விதமாக தெலங்கானா (ஹைதராபாத்), ராஜஸ்தான் மாநிலங்களில் நடைபெற்று முடிந்த தேர்தல்களில் பாஜக வெற்றியடைந்துள்ளது. இந்த மாநிலங்களில் பாஜகவின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : புல்வாமாவில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!