புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் 15, திமுக 3, சுயேட்சை 1 என 19 எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ் ஆட்சி செய்துவருகிறது.
கடந்த வாரம் புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து சட்டப்பேரவை செயலரிடம் கடிதம் கொடுத்தனர். இது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல், என்.ஆர்.காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயபால் தலைமையில் பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், செல்வகணபதி சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயிடம் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர இன்று கடிதம் அளித்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பாஜக எம்.எல்.ஏக்கள் பேசுகையில், ’ஆளுங்கட்சி மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. காங்கிரஸ் அரசு மக்களுக்கு எவ்வித நல்ல திட்டங்களையும் செய்யவில்லை. எனவே எதிர்க்கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முழு ஆதரவும் பாஜக சார்பாக உண்டு’ என்றனர்.
வருகிற 26ஆம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்கட்சிகள் கடிதம் வழங்கியிருப்பது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.