பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரான மாயாவதிக்கும் இடையே அண்மைக்காலமாக வார்த்தைப் போர் நீடித்துவருகிறது. இந்நிலையில், நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாயாவதி கூறியதாவது,
ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வார் பகுதியில் பட்டியலின பெண் மீது நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல் குறித்து முதலில் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த மோடி, இந்த வழக்கு பூதாகரமாக வெடித்தபின் தற்போது அரசியல் லாபத்திற்காக அதைப் பயன்படுத்த நினைக்கிறார். மேலும், பிரதமர் மோடியை கண்டு பாஜகவில் உள்ள பெண்கள் பயந்துள்ளனர்.
ஏனெனில் தங்களின் கணவன்மார்கள் பிரதமரை சந்திக்க நேரிட்டால், மனைவியை விட்டு அரசிலுக்கு சென்ற மோடியைப்போன்று அவர்களும் அரசியலுக்குச் சென்று விடுவார்கள் என்று பயத்தில் பாஜக பெண்கள் இருப்பதாக கூறினார்.
மாயாவதியின் இந்தக் கருத்துக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவில் உள்ள பெண்கள் பாதுகாப்புடனும் இருப்பதாக தெரிவித்த அவர், பிரதமர் குறித்து மாயாவதியின் இந்த அவதூறு கருத்து அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், மாயவதி தனது கருத்துக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது டிவிட்டர் பக்கத்தில், பிரதமராக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்துவரும் மாயாவதி, மோடி குறித்து தெரிவித்த இந்தக் கருத்து, அவர் பொதுவாழ்க்கைக்கு தகுதியில்லாதவர் என்பதை உணர்த்துவதாக விமர்சித்துள்ளார்.