டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இத்தேர்தலில், 70 தொகுதிகளிலும் ஆளும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளது. அதேபோல காங்கிரஸ் கட்சியும் ராஷ்டிரிய ஜனதா தளமும் இணைந்து போட்டியிடவுள்ளன.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக டெல்லி மாநிலத் தலைவர் மனோஜ் திவாரி, டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுவது இதுவே முதன்முறை. இந்தக் கூட்டணி டெல்லிக்கு புது உத்வேகத்தை கொடுத்துள்ளது.
பிகாரைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள ஐக்கிய ஜனதா தளமும் லோக் ஜனசக்தி கட்சியும் டெல்லியில் போட்டியிடவுள்ள 67 பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்வார்கள்" என்றார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 67 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 2 இடங்களிலும், லோக் ஜனசக்தி ஒரு இடத்திலும் போட்டியிடவுள்ளது.
மேலும், பிகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மத்திய உணவு மற்றும் நுகர்பொருள் அமைச்சரும் லோக் ஜனசக்தியின் தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வானும் டெல்லி தேர்தலில் பரப்புரையில் ஈடுபடவுள்ளார்.
இதையும் படிங்க: டெல்லி தேர்தல்: கடைசி நாளில் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்