மேற்கு வங்கத்தில் வடக்கு 24 பாராகன்ஸ் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் மணீஷ் சுக்லா நேற்று (அக். 4) டைட்டாகர் காவல் நிலையம் முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
“இதனால் மேற்கு வங்கத்தில் சட்டம், ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருகிறது” என கூடுதல் (உள்துறை) தலைமைச் செயலர், மாநில காவல் துறைத் தலைவர் (டிஜிபி) ஆகியோர் ஆளுநர் மாளிகை வருமாறு அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் அழைப்பாணை விடுத்திருந்தார்.
இச்சம்பவம் குறித்து பாஜக மாநிலப் பிரிவு தனது ட்விட்டர் பக்கத்தில், “மேற்கு வங்கத்தில் தற்போது கொலைகள் நடப்பது சாதாரணமாகிவிட்டது. டைட்டாகர் பாஜக கவுன்சிலர் மணீஷ் சுக்லா, திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தத் தொடர் கொலைகள் திரிணாமுல் ஆட்சிக்கு முடிவு என்பதைக் காட்டுகிறது" எனத் தெரிவித்துள்ளது.
மேலும், அம்மாநிலத்தில் பாஜகவின் முக்கிய நபரான கைலாஷ் விஜயவர்கயா இச்சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமென கோரிக்கைவிடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “பாராகன்ஸ் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மணீஷ் சுக்லா நேற்று (செப். 04) டைட்டாகர் காவல் நிலையம் முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வி்ஷயத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷல் இச்சம்பவத்தை, “திரிணாமுல் கட்சியின் அரசியல் பயங்கரவாதம்” எனக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். மேலும் அவர் ட்விட்டரில், “பாஜகவின் இளைஞரணித் தலைவரும், வழக்கறிஞரும், முன்னாள் கவுன்சிலருமான மணீஷ் சுக்லா கொடூரமாக கொலைசெய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சியின் ரத்தவெறி அரசியலின் பாசிசத்திற்கு இது உதாரணமாகும். இந்த அரசிடமிருந்து ஏதாவது நீதியை எதிர்பார்க்க முடியுமா? #PoliticalTerrorism of TMC” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாஜகவின் மாநில துணைத் தலைவர் அர்ஜுன் சிங் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “மணீஷ் எனது இளைய சகோதரர் போன்றவர். எப்பொழுதும் எனக்கு கவசமாக இருந்தவர். இன்று மேற்கு வங்கத்திற்கான அவருடைய தியாகத்தை பராக்பூர், வங்காளம் நினைவில் கொள்ளும். திரிணாமுல் கட்சியின் தலைவரும், காவல் துறையும் இந்தத் தவறான செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.