70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 10ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று கோகல்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "டெல்லிவாசிகள் பாஜகவினை ஆதரிக்கவில்லை. அதனால் டெல்லி மக்களைத் தோற்கடிக்க அவர்கள் 200 எம்.பி.க்களையும் 70 அமைச்சர்களையும் 11 முதலமைச்சர்களையும் இங்கு கூட்டிவருகின்றனர்.
இவர்கள் அனைவரும் உங்கள் வீட்டுப் பிள்ளை கெஜ்ரிவாலை தோற்கடிக்கவே இங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். நம்மை அவமானப்படுத்தவே வெளியாட்களை இங்கு கூட்டிவருகின்றனர் என்றார்.
மேலும், வெளியாட்கள் இங்கு வந்து, இங்குள்ள பள்ளிகளும் மருத்துவமனைகளும் நன்றாக இல்லை என்று கூறுகின்றனர், அதைக்கேட்டுக்கொண்டு நீங்கள் அமைதியாக இருப்பீர்களா?" என்று மக்களை நோக்கி கேள்வி எழுப்பினார். கூட்டத்தில் இருந்த டெல்லிவாசிகள் இல்லை என்று ஒருங்கிணைந்த குரலில் பதிலளித்தனர்.
இதையும் படிங்க: விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.12 ஆயிரம் கோடி செலுத்தல்: மோடி பெருமிதம்