தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே, கட்சியில் பல மாற்றங்களை பாஜக அதிரடியாக செய்துவருகிறது. இந்நிலையில், கேரளா பாஜக பொறுப்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க பாஜக பொறுப்பாளராக கைலாஷ் விஜய்வர்கியாவே தொடர்வார் என பாஜக அறிவித்துள்ளது. அவருக்கு உதவியாக, தகவல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மால்வியாவை பாஜக நியமித்துள்ளது. பிகார், குஜராத் ஆகிய மாநிலங்களின் பொறுப்பாளராக புபேந்தர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நெருக்கமான முரளிதர் ராவுக்கு மத்தியப் பிரதேசம் ஒதுக்கப்பட்டுள்ளது. மணிப்பூர், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் பொறுப்பாளராக இருந்துவந்த ராம் மாதவ் அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
மணிப்பூர் பாஜக பொறுப்பாளராக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சம்பிட் பாத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள அஸ்ஸாம் மாநிலம், பைஜயன்ட் ஜெய் பாண்டாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, கோவா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் பொறுப்பாளராக அக்கட்சியின் தேசிய செயலாளர் சி.டி. ரவி நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, தேசிய செயலாளர் பதவியிலிருந்து எச். ராஜா நீக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கேரளா பொறுப்பாளர் பதவியிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.