காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு நீக்கியது. இதனைத் தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்களின் சட்டப்பேரவையில் இதற்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவையில் அரசியலமைப்பு சட்டம் 370 நீக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்ற பாஜக, அகாலி தளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் முயன்றுள்ளனர். குறிப்பாக, 370 ரத்து செய்யப்பட்டதற்கு தனது ஏகோபித்த ஆதரவை வெளிப்படுத்தி, அவை மரபுகளை மீறுகின்ற வகையில் செயல்பட்டதாகக் கூறப்படும் பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் குப்தா, இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலகத்திற்கு வெளியே நின்று பாஜக, அகாலி தளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றத்தை ஏற்படுத்தியது.