சத்தீஸ்கர் மாநிலம், கரியாபாந்த் பகுதியில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலம் அருகே பழமையான சால் மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் அடிப்பகுதியில் இருந்து சிறிய நீரோடை போன்று தண்ணீர் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் நீரை பிடித்து புனித நீர் என்று வீட்டிற்கு கொண்டு சென்றனர். மேலும் சிலர் இந்த சால் மரத்தில் கடவுள் விஷ்ணு குடிகொண்டிருக்கிறார். அதனால்தான் தண்ணீர் வெளியாகிவருகிறது என்றனர்.
இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் மரத்தில் இருந்து தண்ணீர் வருவதை தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். இந்தக் காணொலி தற்போது வைரலாகிவருகிறது. இதைக் காண சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து அதிகளவு மக்கள் வந்து செல்வதால் அந்தப் பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது. தகவலறிந்து வந்த பொதுப்பணித் துறை, சுகாதார பொறியியல் அலுவலர்கள் மரத்தில் தண்ணீர் வருவது குறித்து ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.