ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள மலையடிவார கிராமம் ஒன்றில் பெய்துவரும் கனமழையால் அப்பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் ஆற்றைக் கடக்க மிகவும் சிரமப்பட்டு வந்த நிலையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் இருசக்கர அவசர ஊர்தி வாகனத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் கனமழை பெய்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பலர் மலையடிவார கிராமங்களுக்குச் செல்ல அச்சப்பட்டனர். இந்நிலையில், இருசக்கர அவசர ஊர்தி ஓட்டுநர் சிவா என்பவர் துணிச்சலாக அந்த மலையடிவார கிராமத்திற்குச் சென்றார்.
ஆனால் சிவா வருவதற்கு முன்பே அந்த பெண்ணிற்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அதன்பின், அப்பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது ஆற்றின் குறுக்கே இருசக்கர அவரசர ஊர்தி சிக்கிக்கொண்டது. இருப்பினும் அவசர ஊர்தி ஓட்டுநர் திறமையாகச் செயல்பட்டு தாயையும், சேயையும் பாதுகாப்பாக தாரகொண்டா ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு கொண்டுசென்றார்.
இதையடுத்து, அந்த பெண்ணின் குடும்பத்தினர் உயிரைக் காப்பாற்றிய அவசர ஊர்தி ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்தனர். இருசக்கர அவசர ஊர்தி ஓட்டுநர் திறம்பட செயல்பட்டு கர்ப்பிணி பெண்ணின் உயிரைக் காப்பாற்றியுள்ளது விசாகப்பட்டினம் மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காரில் கடத்திய 195 கிலோ கஞ்சா பறிமுதல்; ஓட்டுநர் கைது!