243 சட்டப்பேரவைத் தொகுதி கொண்ட பிகார் மாநில தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா இணைந்த கூட்டணிக்கும், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி இணைந்த மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
காங்கிரசின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பிகார் தேர்தலுக்கான காங்கிரஸ் அறிக்கையை பாராட்டியுள்ளார். மேலும் தேர்தல் நெருங்கிவரும் இந்த சூழலில் பிகார் மக்களுக்கு ஒரு கடிதத்தையும் எழுதியுள்ளார்.
அதில், விவசாயிகளின் கடன் தள்ளுபடி, மின் கட்டணத்தில் சலுகை, பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி, நிலமற்றவர்களுக்கு வீட்டுவசதி ஆகிய பிகார் மக்களுக்கு தேவையான அனைத்தையும் தேர்தல் வாக்குறுதிகளாக நாங்கள் வழங்கியுள்ளோம்.
பிகார் மக்களுக்கு நீர் உரிமை, சுகாதார உரிமை கிடைக்கும். தனி விவசாய மசோதாவையும் கொண்டுவர காங்கிரஸ் உறுதியளித்துள்ளது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி இணைந்த மெகா கூட்டணி அரசு அமைந்தால் பிகார் புதிய உயரங்களைத் தொடும். முன்னேற்றப் பாதையில் செல்லும் என்று சோனியா காந்தி கூறியுள்ளார்.