இந்தியா - நேபாளம் இடையே எல்லைப் பிரச்னை சில நாள்களாக இருந்து வருகிறது. இந்திய பகுதிகளை இணைத்து புதிதாக தயாரிக்கப்பட்ட வரைப்படத்திற்கு நேபாளம் நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு, இந்திய அரசு தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேபாள அரசு இந்திய எல்லையின் பந்தோகா கிராமத்தில் திடீரென்று கண்காணிப்பு கோபுரம் ஒன்றை கட்டியுள்ளது. மைனர் பில்லருக்கு அருகில் கட்டப்பட்ட இந்த கோபுரமானது, நேபாள் அரசு எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தும் முயற்சியாக கூறப்படுகிறது. இந்த திடீர் கண்காணிப்பு கோபுரம் எல்லைப் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, இந்தியாவில் பிகார், உத்தரப் பிரதேசம் மாநிலங்களுக்கு பயனளிக்கும் சர்வதேச முக்கிய திட்டமான கந்தக் பேரேஜ் பழுதுபார்ப்பு பணிகளை செய்ய விடாமல் நேபாள அரசு தடுப்பதாக, நிதீஷ் குமார் தலைமையிலான அரசு குற்றஞ்சாட்டியிருந்தது.