பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த அக்டோபர் 28ஆம் தேதி, முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையே, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் கோட்டையாக கருதப்படும் சப்ரா நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று தனது பரப்புரையை தொடங்கினார். தேஜஸ்வி யாதவ், ராகுல் காந்தி ஆகியோரை தாக்கி பேசிய அவர், உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சியை எப்படி வீழ்த்தினோமோ அதேபோல் பிகாரிலும் வீழ்த்துவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "சில ஆண்டுகளுக்கு முன்பு, உத்தரப் பிரதேசத்தில் இரண்டு இளவரசர்களுக்கு (ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ்) எதிராக வெற்றி கண்டோம். தற்போது அதேபோல், பிகாரிலும் தங்கள் மகுடத்தை காப்பாற்றிக்கொள்ள இரண்டு இளவரசர்கள் (தேஜஸ்வி யாதவ், ராகுல் காந்தி) போராடிக்கொண்டிருக்கின்றனர்.
பாஜக, ஐக்கிய ஜனதா தள ஆட்சியை 2 என்ஜின்கள் கொண்ட ஆட்சி என தேஜஸ்வி விமர்சனம் செய்கிறார். இந்த இரண்டு என்ஜின்கள் கொண்ட ஆட்சிதான் பிகார் வளர்ச்சிக்காக நடவடிக்கை எடுத்துள்ளது" என்றார்.