பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் அரசியல் களம் பரபரப்பாகி வருகிறது. அந்த வகையில், மாநில தேர்தல் அரசியலில் ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.எஸ் அலுவலர் அனுபம் குமார் சுமன், முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு எதிராக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு மிக நெருக்கமான அதிகார மைய அலுவலராக திகழ்ந்த சுமன், ஆளும் கட்சியின் சிறப்புக் கோரிக்கையின் பேரில் குஜராத்தில் இருந்து பிகார் மாநிலத்திற்கு இடம்பெயர்ந்தவர். பிகாரின் தலைமைச் செயலகத்தில் முதன்மை செயலர் உள்பட பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு தலைநகரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்த மாநில அரசின் அழுத்தம் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தான் வகித்துவந்த பாட்னா மாநகராட்சி ஆணையர் (பிஎம்சி) பதவியில் இருந்து சுமன் விலகினார். ஓராண்டுக்கு பின், பிகாரின் ஆட்சி நிர்வாகம் தொடர்பாக முதல்முதலாக விமர்சனம் செய்துள்ள சுமன், "பி.எம்.சி நிர்வாகத்தில் அலுவலர்களுக்கு உரிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இல்லை. எனவே, இந்த துறையில் யாரும் பணியில் இணைய விரும்பவில்லை.
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஆக்கப்பூர்வமாக அரவிந்த் கெஜ்ரிவால் வேலை செய்ததை போலவே பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு எதிராக தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது" என சூசகமாக கூறியுள்ளார்.
புஷ்பம் பிரியா சவுத்ரி தலைமையிலான 'ப்லுரள்ஸ்' (பன்மை) என்ற கட்சியில் இணைந்து சுமன் பணியாற்றி வருவது கவனிக்கத்தக்கது.