குற்றவாளிகளைத் தூக்கிலிடும் கயிறுகளை தயார் செய்வதில் பிகார் மாநிலம் பக்சர் சிறை பிரபலமானதாகும். 10 தூக்குக் கயிறுகளை தயார் செய்யும்படி இங்குள்ள சிறைத் துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிர்பயா வழக்கு குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதற்கு இந்தக் கயிறு தயார் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பக்சர் சிறை கண்காணிப்பாளர் விஜய் குமார் அரோரா, "டிசம்பர் 14ஆம் தேதிக்குள் 10 தூக்கு கயிறுகளைத் தயார் செய்யும்படி சிறை இயக்குநரகம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கயிறுகள் எங்கு பயன்படுத்தப்படும் என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. சிறை கயிறுகளை பல ஆண்டுகளாக தயாரித்துவருகிறோம். ஒரு கயிறை தயார் செய்வதற்கு மூன்று நாள்கள் ஆகும்.
இங்கு தயார் செய்த கயிற்றை பயன்படுத்திதான் நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட அப்சல் குருவை தூக்கிலிட்டார்கள். 2016 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் பட்டியாலா சிறையிலிருந்து கயிறுகளைத் தயார் செய்யும்படி உத்தரவுவந்தது. ஆனால், யாரை தூக்கிலிடுவதற்கு இந்தக் கயிறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை" என்றார்
ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளைத் தூக்கிலிட பல்வேறு தரப்பினர் கோரிக்கைவிடுத்திருந்தனர். ஆனால், ஹைதராபாத் காவல் துறையினர் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை என்கவுன்டர் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் - ஆட்சியை தக்கவைத்த எடியூரப்பா!