அசாம், பிகார் மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக தொடர் கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக பிரம்மபுத்ராவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் போக்குவரத்து சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 60 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெள்ளப்பெருக்கை சமாளிக்க 21 என்.டி.ஆர்.எஃப் குழுவினர் வெவ்வேறு மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். பல வீடுகள் வெள்ளத்தில் சூழப்பட்டுள்ளதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "எங்கள் பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்து வருகிறது. நாங்கள் சாப்பாடு இல்லாமல் தவித்து வருகிறோம். இதுவரை எங்களுக்கு உதவ நிர்வாகத்திலிருந்து யாரும் வரவில்லை. சிறிய வீடுகள் அனைத்தும் நீரில் மூழ்கிவட்டது. பல மக்கள் உயரமான கட்டங்களில் சிக்கி தவிக்கின்றனர். இன்று சில படகுகள் மக்களை மீட்க வந்துள்ளதை காணமுடிகிறது. ஆனால், மிகவும் குறைவான அளவிலேயே உள்ளன" என வேதனையுடன் தெரிவித்தனர்.
இந்நிலையில், பிகாரில் தர்பங்கா - சமஸ்திபூர் இடையிலான ரயில் சேவைகள் வெள்ளம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.