கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதியன்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் நடிகர் சுஷாந்த் சிங்கின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சுஷாந்தின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய அவரது தந்தை கே.கே.சிங்கின் வேண்டுகோளை ஏற்று உச்ச நீதிமன்றம் மத்திய குற்றப்புலனாய்வுத் துறையின் வசம் ஒப்படைக்க உத்தரவிட்டது. தற்போது அந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ. அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
பிகார் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக அறிவித்துள்ள நிலையில், அதில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் உறவினர் பெயர் இடம்பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. சத்தாப்பூர் தொகுதியில் தற்போதுள்ள பாஜக எம்எல்ஏவும் சுஷாந்தின் உறவினருமான நீரஜ் குமார் சிங்குக்கே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அனுதாப அலையை ஈர்க்க பாஜக திட்டமிட்டிருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
சந்தேகத்திற்கு இடமான வகையில் அவர் மும்பையில் இறந்து கிடந்ததை தொடர்ந்து பொதுவெளியில் இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் ஆறு பெண்கள் இடம்பெற்றுள்ளனர். ராம்நகரிலிருந்து பாகிரதி தேவியும் நார்கதியகஞ்சிலிருந்து ராஷ்மி வர்மாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ரக்சவுல், மோதிஹரி, தார்பங்கா உள்ளிட்ட முக்கியமான தொகுதிகள் தற்போது பாஜக வசமே உள்ளது. 243 தொகுதிகள் உள்ள பிகாரில் பாஜக 121 இடங்களில் போட்டியிடவுள்ளது. இதன் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 122 இடங்களில் போட்டியிடவுள்ளது.
பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு தேர்தல்களில் பதிவான வாக்குகள் நவம்பர் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இதையும் படிங்க: நவம்பரில் மாநிலங்களவை தேர்தல்: பெரும்பான்மையை நோக்கி பாஜக!