ஹைதராபாத்திலிருந்து 200 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள கரீம்நகர் மாவட்டத்தில் உள்ளது பொதிரிடெடிபெட்டா கிராமம். இக்கிராம மக்கள், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனின் உரைகளை கேட்க மிகுந்த ஆவலாக உள்ளனர். காரணம் அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்றுக் கொள்ளும் ஜோ பைடனின் உரைகளை தயார் செய்வதில் இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் பங்குள்ளதாகக் கூறுகின்றனர்.
ஆம், இந்தக் கிராமத்தைச் சேர்ந்த நாராயண ரெட்டி என்பவர் 1970ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். இவரது மகன் வினய் ரெட்டி. வினய் ரெட்டிதான் இன்று அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு பரப்புரையின்போது முக்கிய ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.
மக்கள் வினய் ரெட்டியை அறியாவிட்டாலும், அவரது தந்தையின் நினைவுகள் இன்றளவும் தங்களுடன் தொடர்பில் உள்ளதாகக் கூறுகின்றனர். கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்த நாராயண ரெட்டி, ஹைதராபாத்தில் மருத்துவம் பயின்றார். பின்னர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். இவரது மகன் வினய் ரெட்டி அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தார். ஆனால் அவரது குடும்பம் கிராமத்துடன் அதன் தொடர்புகளை தொடர்ந்து பேணி வந்தது. இவர்களது குடும்பத்திற்கு தற்போதுவரை மூன்று ஏக்கர் நிலமும், பொதிரெடிபெட்டாவில் ஒரு வீடும் உள்ளது.
நாராயண ரெட்டி மற்றும் அவரது மனைவி விஜயா ரெட்டி இன்றும் கிராமத்திற்கு சென்று உறவினர்களையும், நண்பர்களையும் சந்திக்கிறார்கள். அவர்கள் கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் கிராமத்திற்கு சென்றிருந்தனர். வினய் ரெட்டியின் தாத்தா திருப்பதி ரெட்டி கிராம பஞ்சாயத்து தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றியவர்.
இது எங்கள் குடும்பத்திற்கு மட்டுமல்ல, முழு கிராமத்திற்கும் பெருமை சேரக்கும் விஷயம். தங்களது கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் அமெரிக்காவில் இது போன்ற ஒரு முக்கிய நிலைக்கு உயர்ந்தது சொல்ல முடியாத அளவு ஆனந்தத்தைத் தருகிறது என்று வினய் ரெட்டியின் உறவினர் சோலெட்டி சாய் கிருஷ்ணா ரெட்டி கூறினார். இவர் தற்போது கிராமத்திலுள்ள நாராயண ரெட்டியின் குடும்ப நிலத்தை கவனித்து வருகிறார்.
வினய் ரெட்டி அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் வேட்பாளர்களான ஜோ பைடன்-கமலா ஹாரிஸிற்கு பரப்புரைகளின்போது அவர்கள் உரையை தயார் செய்யும் எழுத்தாளராகவும், பைடன்-ஹாரிஸ் பரப்புரையின் மூத்த ஆலோசகராகவும் பணியாற்றினார் என்று பைடன்-ஹாரிஸ் வலைதளத்தின் வாயிலாகத் தெரிகிறது.
இவர் முன்னதாக ஒபாமா-பைடன் வெள்ளை மாளிகையின் இரண்டாவது பதவியில் துணை அதிபர் பைடனுக்கு தலைமை பேச்சு எழுத்தாளராக பணியாற்றினார். அதன் பிறகு, அவர் தேசிய கூடைப்பந்து கழகத்தில் தகவல் தொடர்பு துறையின் துணைத் தலைவராக பணியாற்றினார்.
இவர் ஒபாமா-பைடன் நிர்வாகத்தின்போது, அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் குறித்த மூத்த எழுத்தாளராக இருந்தார். இவர் தற்போது நியூயார்க்கில் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.