இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திரயான் 2 விண்கலம் ஜூலை 22ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டு, பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஆர்பிட்டர் எனப்படும் வட்டமடிப்பானிலிருந்து பிரக்யானுடன் (ஆய்வூர்தி) 'விக்ரம்' லேண்டர் பிரிந்து நிலவில் தரையிறங்க நேற்று புறப்பட்டது.
ஆனால், நிலவின் தரையிலிருந்து 2 கி.மீ. தொலை தூரத்திலிருந்த விக்ரம் லேண்டர் 2:20 மணிக்கு இஸ்ரோவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இருப்பினும் இஸ்ரோவின் கடுமையான முயற்சிக்கு பலர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
இது குறித்து பூடான் பிரதமர் லோடாய் ஷேரிங் தன் ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவையும், அதன் அறிவியல் அறிஞர்களையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன். சந்திரயான்-2 கடைசி சில நிமிடங்களில் சோதனையை சந்தித்தபோதிலும், அறிவியல் அறிஞர்களின் கடின உழைப்பு, துணிவு ஆகியவை வரலாற்று சிறப்புமிக்கவை. இஸ்ரோவும் பிரதமர் மோடியும் வருங்காலத்தில் சாதனை படைப்பார்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.