செப்டம்பர் 1ஆம் தேதி மத்திய அரசின் மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தது. அதன்படி போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனச் சட்டத் திருத்த படி சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவருக்கு ரூ.23,000 அபராதம் விதிக்கப்பட்டது. சத்தீஸ்கரை நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்றின் ஓட்டுநரிடம் உரிமம் இல்லாதது உட்பட பல விதிமீறல்களுக்காக அவருக்கு ரூ.86,000 அபராதம் விதிக்கப்பட்டது.இது போன்ற எண்ணற்ற சம்பவங்கள் நாடு முழுவதும் வாகன ஓட்டிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் தலைக்கவசம் அணியாது இருசக்கர வாகனத்தில் பயணிப்போரை தடுக்க வித்தியாசமான அணுகுமுறையை காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில், தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளிடம் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசங்களையும் வழங்கி வருகின்றனர். இதேபோல், சாலை விதிகளை முறையாக பின்பற்றுகிறவர்களுக்கு நன்றி என்று எழுதப்பட்ட வாழ்த்து அட்டைகளும் வழங்கப்படுகின்றன. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.