புவனேஸ்வர்: விடுதலைப் போராட்ட காலத்தில் தீவிரமாகக் களத்தில் செயல்பட்ட பபானி சரண் பட்நாயக் ஒடிசா தலைநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றுவருகிறார்.
காந்தியவாதியான 98 வயதுடைய பபானி சரண் பட்நாயக் இருதயக்கோளாறு காரணமாக, ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யு.) அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக், மருத்துவ உயர்மட்ட அலுவலர்களைத் தொடர்புகொண்டு பபானி சரண் பட்நாயக்கின் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரது மருத்துவச் செலவு முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் தொடர்ந்து அவரின் உடல்நிலையைக் கண்காணித்துவருகின்றனர். இதனிடையே மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், விரைவில் பபானி சரண் பட்நாயக் குணமடைய தாமும் பிரார்த்தனை செய்வதாகக் கூறியுள்ளார்.
இவரைப் பற்றி...
- பபானி சரண் பட்நாயக்கின் சொந்த ஊர் பூரி மாவட்டத்திலுள்ள நிமபரா.
- மூன்று முறை (1961, 1966, 1978) அம்மாநில சட்டமேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- இவர், கடந்த 2018ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர்.
இதையும் படிங்க: மக்களுடன் அரசும், அரசுடன் மக்களும் கைகோர்க்க வேண்டிய நேரமிது!