மேற்கு வங்கம் மாநிலம், கதால் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இந்தத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் ஐபிஎஸ் அலுவலரான பாரதி கோஷ் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த திருணாமுல் காங்கிரஸ் பெண் தொண்டர்கள் அவரது காரை மறித்து முற்றுகையிட்டனர்.
அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் பாரதி கோஷ் வந்த காரை கல்வீசி தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வாக்குச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அவரை பத்திரமாக மீட்டு வாக்கு மையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இதே காரில் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் ரூ.1.13 லட்சம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.