கரோனாவுக்குத் தடுப்பு மருந்தை தயாரிக்க உலகின் பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி இந்தியாவில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கும் கோவாக்சின் என்ற தடுப்பு மருந்து, தற்போது மூன்றாம்கட்ட மருத்துவப் பரிசோதனையில் உள்ளது.
இந்நிலையில், இன்று இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் சார்பில் ஹைதராபாத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பேசிய பாரத் பயோடெக் தலைவர் டாக்டர் கிருஷ்ணா எலா, கோவாக்சின் குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணா எலா பேசுகையில், "நாங்கள் தற்போது மூன்றாம்கட்ட மருத்துவப் பரிசோதனையில் உள்ளோம். ஆனால், நான் மகிழ்ச்சியாக இல்லை. ஏனென்றால், எங்கள் கோவாக்சின் தடுப்பு மருந்து இரண்டு முறை ஊசி மூலம் செலுத்த வேண்டிய ஒரு தடுப்பு மருந்தாகும்.
எனவே, 130 கோடி மக்களுக்கு நாம் தடுப்பு மருந்தை அளிக்க வேண்டும் என்றால் நமக்கு 260 கோடி டோஸேஜ் தடுப்பு மருந்தும், 260 கோடி சிரிஞ்சுகள், ஊசிகள் தேவை.
இதன் காரணமாகவே நாங்கள் புதிதாக நாசியின் வழியாக ஒரு முறை மட்டும் செலுத்த வேண்டிய கரோனா தடுப்பு மருந்தின் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகிறோம்.
ஏற்கனவே, ரோட்டா வைரஸ் மற்றும் போலியோ ஆகியவற்றுக்கு நாசி மூலம் செலுத்தப்படும் தடுப்பு மருந்துகளைத் தயாரிப்பதில் எங்களுக்கு அனுபவம் உள்ளது" என்றார்.
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழகம் உருவாக்கிவரும் நாசி மூலம் செலுத்தக்கூடிய கோவிட்-19 தடுப்பு மருந்தை உற்பத்தி செய்யவும், விநியோகிக்கவும் பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டது.
தொடர்ந்து பேசிய கிருஷ்ணா எலா, "130 கோடி மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்க வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. அவர்களில் 60 கோடி பேருக்கு தடுப்பு மருந்தை வழங்கிவிட்டாலே நான் ஆராய்ச்சியாளராக வெற்றி பெற்றுவிட்டேன் என்று அர்த்தம். ஏனென்றால், 60 கோடி பேருக்கு தடுப்பு மருந்தை அளித்தாலே போதும், மற்றவர்களை Herd immunity காக்கும்" என்றார்.
Herd immunity என்றால் என்ன?
ஒரு நாட்டில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவிலான மக்களுக்கு தடுப்பு மருந்தை அளிப்பதன் மூலம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முறையாகும்.
இதையும் படிங்க: கரோனாவை தடுப்பு மருந்து இல்லாமலும் கட்டுப்படுத்தலாம் - எய்மஸ் இயக்குநர்