கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து மே 25ஆம் தேதி மீண்டும் தொடங்கப்பட்டது. இருப்பினும் உள்நாட்டு விமானங்களில் பயணிப்போருக்கு உணவு சேவை இல்லாத நிலையே தொடர்ந்தது.
அதேபோல சர்வதேச விமானங்களில் மே முதல் விமானப் பயணக் கால அளவைப் பொறுத்து முன்பே தயார் செய்யப்பட்டு, பேக்கில் அடைக்கப்பட்ட குளிர் பானங்கள், சிற்றுண்டிகள் மட்டும் வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், விமானம் கால அளவைப் பொறுத்து உள்நாட்டு விமானங்களில் முன்பே பேக் செய்யப்பட்ட சூடான உணவு மற்றும் வரையறுக்கப்பட்ட பானங்களை வழங்கலாம் என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் உணவு அல்லது பானங்களை பரிமாறும்போது ஒற்றை பயன்பாட்டு தட்டுகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சகம் கூறியுள்ளது. ஒவ்வொரு முறை உணவு / பானங்கள் வழங்கும்போதும் புதிய கையுறைகளை அணிய வேண்டும் என்று அது குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல, முகக் கவசம் அணியாத பயணிகளை விமான பயணத்தில் இருந்து நிரந்தரமாக தடை செய்யும் வகையில் தடை செய்யப்பட்டோர் பட்டியலில் பதிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.