அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படை தேவையாக இருப்பது தண்ணீர். அது இல்லாமல் எந்த உயிரினமும் வாழ முடியாது. உணவின்றி கூட மனிதர்கள் சில நாட்கள் வாழ்ந்திடுவார்கள்.ச ஆனால் தண்ணீர் இன்று வாழ்ந்திட முடியாது. நீர்நிலைகளை பாதுகாத்து தண்ணீரை வீணடிக்காமல் இருப்பது அரசின் கடமை மட்டுமல்ல தனி மனிதர்களின் கடமையும் ஆகும்.
தெலுங்கு பேசும் மாநிலங்களில் அதிகளவில் மழை பெய்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் நிரம்பி ஓடுவதால், கிருஷ்ணா, கோதாவரி ஆகிய ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எதிர்காலத்திற்காக, இந்த தண்ணீரை சேமிக்க வேண்டும். ஆனால், இதற்காக எந்த முயற்சியும் எடுக்காமல் இருப்பது வருத்தமளிப்பதாக உள்ளது.
உலகளவில் 1960ஆம் ஆண்டு முதல் தண்ணீரின் பயன்பாடு அதிகரித்தது. இதனால், நீர் வளங்கள் குறைய தொடங்கியது. நான்கில் ஒரு மடங்கு மக்கள் தொகை கொண்ட 17 நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை பிரச்னையை சந்தித்து வருகின்றன. இந்த நாடுகளின் 80 விழுக்காடு தண்ணீரை விவசாயம், தொழிற்சாலைகள், நகர்புற மக்கள் ஆகியோர் பயன்படுத்திவருகின்றனர்.
உலகின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகை கொண்ட 44 நாடுகள் 40 விழுக்காடு தண்ணீரை பயன்படுத்துகின்றன. இங்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தேவைக்கு ஏற்றார்போல் தண்ணீர் வழங்கப்படாததால், பல இடங்களில் வறட்சி ஏற்படும் ஆபாயம் உருவாகியுள்ளது.
வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, விவசாய உற்பத்தி, உணவு பாதுகாப்பு, வணிகம் ஆகியவற்றில் இதனால் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பு, நகர்ப்புறமயமாக்கல், சமூக பொருளாதார வளர்ச்சி, தொழில்மயமாக்கல் ஆகியவற்றால் தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது.
90 விழுக்காடு நகரங்கள் தண்ணீரை குழாய்களின் மூலம்தான் பெறுகிறது. 80 விழுக்காடு கிராமங்களில் முறையான தண்ணீர் வசதிஇல்லை. பெண்களும், குழந்தைகளும் பல கி.மீ நடந்து சென்றே தண்ணீரை எடுத்துவருகின்றனர். நீர்பாசனங்கள், நீர்த்தேக்கங்கள் ஆகியவற்றை உருவாக்குவதில் சுதந்திரத்திற்கு பிறகு அமைந்த அரசுகள் அதிக முக்கியத்துவம் அளித்தன.
குடிநீர் ஆதாரங்களை அதிகரிப்பதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர், குடிமக்களின் தேவையை அறிந்து, தண்ணீர் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை அரசு புரிந்து கொண்டது. இதன் விளைவாக, 1987ஆம் ஆண்டு தேசிய நீர் கொள்கை முதன்முதலாக வகுக்கப்பட்டது.
பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில், பருவமழையை நம்பியே மக்கள் உள்ளனர். வடமாநிலங்களில், மேற்பரப்பில் உள்ள தண்ணீர் நிலை உயர்ந்து காணப்படுகிறது. ஆனால், தென் மாநிலங்களின் நிலை வேறு. இந்த பகுதிகளில் நிலப்பரப்பு பாறையாகவே காணப்படுகிறது. மழைக் காலங்களில் நாட்டின் பல பகுதிகளில், சராசரியாக 500 மி.மீ அளவு மழை பெய்கிறது. இந்த தண்ணீரை சேமிக்க, 10 முதல் 12 சதுர மீட்டர் அளவிலான பகுதி தேவைப்படுகிறது.
ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. தமிழ்நாட்டின் தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம் முறையான சேமிப்பு திட்டம் இல்லாததுதான். தொழிற்சாலை கழிவு, ரசாயன உரம் ஆகியவற்றால் தான் நிலத்தடிநீரில் மாசு ஏற்படுகிறது. தரமற்ற குழாய்களை பயன்படுத்துதல், கழிவுநீரில் கசிவு ஏற்படுதல் ஆகியவற்றால் மக்களுக்கு நோய் பரவுகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்தில், கால்வாய் மூலம் தண்ணீர் வழங்குவது பெயரளவில் மட்டுமே உள்ளது.
தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா 13ஆவது இடத்தில் உள்ளது என நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கில் ஒரு பங்கு மக்கள் தொகை கொண்ட 17 நாடுகளை காட்டிலும் மூன்று மடங்கு அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. நிலத்தடி நீர் ஆண்டுக்கு 8 செ.மீ குறைந்துவருவதாக மத்திய நிலத்தடி நீர் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது, நாட்டின் பொருளாதாரத்திலும் எதிரொலிக்கிறது.
தண்ணீர் பிரச்னையை தீவிரமாக எடுத்துக்கொள்ளாவிட்டால், வரும் ஆண்டுகளில் இந்த பிரச்னை மோசமடையும். தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ள சவுதி அரேபியா, ஒவ்வொரு துளி தண்ணீரை சேமிக்க திட்டம் வகுத்துள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் தண்ணீர் பயன்பாட்டை 43 விழுக்காடு குறைக்க சவுதி அரேபியா முனைப்பு காட்டிவருகிறது. கடந்த 50 ஆண்டுகளாக, சாக்கடை தண்ணீரை மறுசுழற்சி செய்து நமீபியா பயன்படுத்திவருகிறது. வறட்சி காலத்தில், உள்நாட்டு தண்ணீர் பயன்பாட்டை ஆஸ்திரேலியா பாதியளவுக்கு குறைத்துள்ளது.
தண்ணீரை சரியான அளவு பயன்படுத்தினால் மட்டுமே பற்றாக்குறைக்கு தீர்வு காணமுடியும். மழையினால் பெறப்படும் தண்ணீரை பாதுகாக்க வேண்டும். சாக்கடை தண்ணீரை மறுசுழற்சி செய்திட வேண்டும். குடிமக்களும் தங்களால் முடிந்த அளவு தண்ணீரை சேமிக்க வேண்டும். இவற்றை கடைபிடிப்பதன் மூலம், தண்ணீர் பிரச்னையை தீர்க்கலாம்.