பெங்களூருவில் கோரமங்களா பகுதியில் வசித்துவருபவர் என்.வி. ஷேக். இவர் பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். கடந்த 1ஆம் தேதி, ஸ்மார்ட்போனில் உணவு டெலிவரி செய்யும் செயலியில் பீட்சா ஆர்டர் செய்துள்ளார். ஆனால், ஆர்டர் செய்து ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் உணவு டெலிவரி ஆகாததால், வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொண்டுள்ளார்.
அப்போது தொலைபேசியில் பேசிய நபர், "உங்கள் ஆர்டரை உணவகம் எடுத்துக்கொள்ளவில்லை. எனவே, உங்கள் பணத்தைத் திரும்பத் தந்துவிடுகிறோம். உங்கள் செல்போனுக்கு குறுஞ்செய்தியில் லிங்க் ஒன்று வரும். அதை கிளிக் செய்தால் பணம் திரும்பச் செலுத்தும் பிராசஸ் ஆரம்பித்துவிடும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய ஷேக், தனது செல்போனுக்கு வந்த குறுந்தகவலிலிருந்த லிங்கை கிளிக் செய்த சில நிமிடங்களில் வங்கியிலிருந்து பல்க் அமோன்ட் குறைந்துள்ளது. பின்னர், சோதித்த பார்த்த அவர், ரூ. 95 ஆயிரம் ஒரு நொடியில் பறிபோகியுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதனையடுத்து, உடனடியாக மடிவாலா காவல்நிலையத்தில் ஷேக் புகார் செய்துள்ளார். பின்னர் காவல் துறை நடத்திய விசாரணையில், குறிப்பிட்ட உணவகத்தைத் தொடர்புகொண்டபோது, அவர்கள் எங்கள் நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை மைய அலுவலரை தொலைபேசியில் தொடர்புகொள்ளும் வசதி கிடையாது. நாங்கள் சாட்டிங், மின்னஞ்சலில் புகார் அளிக்கும் வசதி மட்டுமே வைத்துள்ளோம்" என்றனர்.
தொலைபேசியில் பேசிய அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர். ஷேக் இழந்த பணம் தாயின் புற்றுநோய் சிகிச்சைக்காகச் சேமித்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருமண விழாவில் தீவிபத்து... 11 பேர் உயிரிழப்பு!