கர்நாடக மாநிலம் ஆர்.ஆர்.நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. மாநிலத்தை ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே அங்கு கடும் போட்டி நிலவி வருகிறது.
காங்கிரஸ் கமிட்டியினரின் தேர்தல் பரப்புரையை முடக்க பாஜகவினர் பல்வேறு இடையூறுகளை செய்துவருவதாக அறியமுடிகிறது. காங்கிரஸ் பரப்புரையில் திட்டமிட்டு நுழையும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் 'மோடி வாழ்க, பாஜக வெல்க' போன்ற முழக்கங்களை எழுப்பி பிரச்னையை ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், யேஷ்வந்த்பூரில் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா பரப்புரை மேற்கொண்ட கூட்டத்தில் சிலர் இடையூறு செய்து தடுத்துள்ளனர். இதனால், கோபமடைந்த காங்கிரஸ் கமிட்டியினர், பெங்களூரு நகர காவல்துறை ஆணையர் கமல் பாந்திடம் இது தொடர்பாக புகார் அளித்தனர்.
இது குறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர், அந்த கும்பலை பின்னால் இருந்து இயக்கிய பாஜகவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் வெங்கடேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட முன்னாள் கவுன்சிலர் வெங்கடேஷ் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.