கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கரோனா வைரஸ் பரவல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இப்பகுதியில் உள்ள மக்கள், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். வேலையின்மை, சம்பளப் பிடித்தம், மருத்துவ வசதி பற்றாக்குறை, அவசர ஊர்திக்கான தட்டுப்பாடு என அவர்களது பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இந்த வேளையில், சரியான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்காததால் மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலரும் மருத்துவமனைக்கு செல்லக்கூட பணமின்றி, வீடுகளிலேயே எவ்வித சிகிச்சையும் கிடைக்காமல் உயிரிழக்கின்றனர்.
இந்நிலையில் இது போன்ற தொடர் செய்திகளால் மனமுடைந்த ஒருவர், ஆட்டோவினை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இலவச அவசர ஊர்தியாக மாற்றியுள்ளார்.
பெங்களூரு மாவட்டம், ஆர்டி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத் சௌதாகர். டிப்ளமோ பட்டதாரியான இவர் பன்னாட்டு நிறுவனங்களிலும் பணியாற்றி வந்தவர். இவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களை உரிய பாதுகாப்புடன் தனது ஆட்டோ மூலமாக இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்காக இவர், தன்னுடைய ஆட்டோவில் சில மாற்றங்களை செய்துள்ளார். அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன், தன்னை முழு உடல் கவசம் கொண்டு மறைத்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முகக் கவசங்கள் அணிவித்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பிறகு தான் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்.
ஒவ்வொரு முறை பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பிறகும் ஆட்டோவினை கிருமி நாசினி கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்கிறார். உதவி தேவைப்படுபவர்கள் தம்மை எளிதில் தொடர்பு கொள்வதற்காக ஆட்டோவில் தன்னுடைய தொலைபேசி எண்ணை எழுதி வைத்துள்ளதுடன், போக்குவரத்து காவலர்களிடம் யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தன்னைத் தொடர்பு கொள்ளுமாறும், இதுகுறித்து சமூக வலைதளங்களிலும் தெரிவித்துள்ளார்.
மேலும், கரோனா வைரஸ் குறித்தும், பாதுகாப்புக் கவசங்களை பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு செய்து வருகிறார். இதற்காக காவல் துறையினரிடம் உரிய அனுமதியையும் பெற்றுள்ளார்.
இவரது இந்த சமூக சேவையைப் பாராட்டி பெங்களூரு மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் இவரை நேரில் சந்தித்துப் பாராட்டியுள்ளார். ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளுக்கு மத்தியில் இவரது அர்பணிப்பைப் பாராட்டி பலரும் இவருக்கு பெட்ரோல் உள்ளிட்ட தேவைகளுக்கான உதவிகளை செய்து வருகின்றனர்.
இவர் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்ட 78 பேரை இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும், கரோனாவிலிருந்து குணமடைந்த 25 பேரை அவர்களது வீடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இவரது பணி மேலும் தொடரவும், இவரை முன்னுதாரணமாகக் கொண்டு பலரும் சேவைப் பணியில் ஈடுபடவேண்டும் எனவும் இவரால் பலனடைந்த பலரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.