கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆதரவற்று சாலைகளில் யாசகம் வேண்டி, தங்களது வாழ்க்கையை நகர்த்திவருவோர் ஒரு வேளை உணவிற்கே அரசை எதிர்பார்த்தனர். சிலருக்கு உணவு கிடைத்தது, சிலருக்கு எதிர்பார்ப்பு மட்டுமே மிஞ்சியது.
இந்நிலையில், சாலையோரங்களில் தவித்துவந்த ஆதரவற்றோருக்கு உணவளிக்க புதுச்சேரி சமூக நலத்துறையினர் கோரிமேடு அரசு காப்பகத்திலும், நகரப் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளிலும் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு, மருந்துப் பொருள்களை வழங்கி வருகின்றனர்.
உடலில் காயப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையளித்து, அவர்களின் தலைமுடியைச் சவரம் செய்து, தூய்மைப்படுத்தி புதிய உடைகளை வழங்கினர். ஆதரவற்றோர்களுக்கும், காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கும் வழங்கப்பட்ட உதவிகள், மற்றும் அரசிடம் அவர்கள் முன்வைக்கவுள்ள கோரிக்கைகள் குறித்து நமது ஈடிவி பாரத் நிருபர் கேட்டறிந்தார்.
இது குறித்து, தெருவோரத்தில் யாசகம் பெற்று பிழைக்கும் இளைஞன் மணிகண்டன் கூறுகையில், 'சிறுவயதில் குடும்பத்தினருடன் சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியேறினேன். தற்போது, ஒருவேளை உணவிற்கே வழியின்றி தெருவில் யாசகம் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். ஊரடங்கில், அந்த ஒருவேளை உணவும் கிடைக்காமல் போனது. ஏதேனும் வேலையிருந்தால் இந்தச் சூழலுக்கு ஆளாகியிருக்கமாட்டேன். சேமிப்பை வைத்து சமாளித்திருப்பேன்.
தற்போது, அரசு அலுவலர்கள் உதவியால் கரோனா முகாமிற்கு வந்திருக்கிறேன். இங்கு, எனக்கு நல்ல துணிமணிகள் வழங்கி, உணவும் கொடுக்கிறார்கள். மற்ற இளைஞர்களைப் போல் நல்ல வேலைக்குச் செல்ல எனக்கு ஆர்வமாகயிருக்கிறது. அரசு ஏதேனும் உணவகங்களில் அல்லது காய்கறிக் கடைகளில் வேலை ஏற்படுத்தி தந்தால்கூட, நல்ல தொழிலாளியாக உழைக்கத் தொடங்கிவிடுவேன்’ என நம்பிக்கைத் ததும்ப பேசுகிறார்.
இதனிடையே, நம்மிடையே உரையாடும் சமூக ஆர்வலர் ஜோசப், "இந்த கரோனா முகாம் மாவட்ட நிர்வாகம், தாசில்தார் தலைமையில் இயங்குகிறது. பழைய பேருந்து நிலையம், ரயில்வே நிலையம் உள்ளிட்டப் பகுதிகளில் சுற்றித்திரிந்தவர்கள், வசித்தவர்கள், முதியோர் ஆகியோரை அழைத்துவந்து கவனித்துக் கொள்கிறோம். ஊரடங்கு உத்தரவு முடிவு பெற்றவுடன், வெளியூரிலிருந்து வேலைக்கு வந்தவர்களை, அவரவர் ஊருக்கு அனுப்பிவிடுவோம். மீதமுள்ள முதியவர்கள், இளைஞர்களுக்கு அரசு சார்பில் உதவ முன்வர வேண்டும்'' என்றார்.
முதியவர்களை ஆதரவற்றோர் இல்லங்களிலும், இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சியும் அளிப்பது, நாட்டின் முன்னேற்றத்திற்கான சிறந்த முன்னெடுப்பு. கரோனா அவர்களை ஒருங்கிணைக்கக் கிடைத்த சிறந்த வாய்ப்பாகும். அரசு இந்த ஊரடங்கு காலத்தை சரியாகப் பயன்படுத்தி, யாசகம் பெற்று வாழ்வோரிடம் , மாற்றத்தை உண்டாக்கினால், அவர்கள் மட்டுமல்ல, சமூகமும் சேர்ந்தே பயன்பெறும்.
இதையும் படிங்க: ஊரடங்கால் வாய்ப்புகள் இல்லாமல் நலிவடைந்த இசைக் கலைஞர்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்டுமா?